என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர் திறப்பு"

    • அணையின் நீர்மட்டம் 64 அடியை கடந்த நிலையில் விருதுநகர் கிருதுமால் நதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
    • 6 மாவட்டங்களில் வைகை கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெற்று வருகின்றன.

    கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக மாவட்டத்தில் கனமழை பெய்ததாலும் அணையின் நீர்பிடிப்பு பகுதிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததாலும் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

    அணையின் நீர்மட்டம் 64 அடியை கடந்த நிலையில் விருதுநகர் கிருதுமால் நதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதனால் இன்று காலை முதல் 5 மாவட்ட பாசனத்திற்கு 1900 கனஅடி, கிருதுமால் நதி பாசனத்திற்கு 442 கன அடி, மதுரை, திருமங்கலம், சேடப்பட்டி குடிநீர் தேவைகளுக்காக 69 கனஅடி என மொத்தம் 2319 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கால்வாய் மூலம் 1900 கன அடி மற்றும் 7 சிறிய மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வைகை கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 63.94 அடியாக உள்ளது. நீர்வரத்து 1411 கன அடி. இருப்பு 4398 மி.கன அடி.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.50 அடி. வரத்து 596 கனஅடி. திறப்பு 1600 கன அடி. இருப்பு 6244 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.90 அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி என அதன் முழு கொள்ளளவில் நீடிக்கிறது. அணைக்கு வரும் 15 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 43.30 அடி. வரத்து 12 கன அடி. திறப்பு 15 கனஅடி. 

    • வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.10 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.

    தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    நேற்று இரவு முதல் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியிலும், கம்பம், கூடலூர், காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வைகை அணையின் நீர்மட்டம் 64 அடியை நெருங்கி வருவதால் அணையில் இருந்து சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கிருதுமால் உபவடி நிலத்திற்கு தேவைக்காக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி வைகை அணையில் இருந்து இன்று காலை முதல் மேற்கண்ட 3 மாவட்டங்களுக்கு 650 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. 8 நாட்களுக்கு 450 மி.கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 63.85 அடியாக உள்ளது. வரத்து 1346 கன அடி. திறப்பு 1319 கன அடி. இருப்பு 4378 மி.கன அடி.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.10 அடியாக உள்ளது. வரத்து 1147 கன அடி. திறப்பு 1400 கன அடி. இருப்பு 6899 மி.கன அடி.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 என முழு கொள்ளளவில் தொடர்ந்து நீடிப்பதால் அணைக்கு வரும் 100 கன அடி முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 48.40 அடி. வரத்து 98 கன அடி. இருப்பு 310 மி.கன அடி. சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 43.10 அடி. வரத்து 15 கன அடி, திறப்பு 14.47 கன அடி.

    கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் இன்று 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேகமலை அருவியிலும் தொடர்ந்து பக்தர்கள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, தேனி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
    • வைகை ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    திண்டுக்கல்:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்குகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே வைகை அணையில் ஓரளவு தண்ணீர் இருந்தது.

    தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் முன்கூட்டியே தொடங்கியது. இதைத்தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, தேனி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி, மூல வைகை ஆறு, கொட்டக்குடி ஆறு உள்ளிட்ட ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர் மழை பெய்தது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. மேலும் அணையின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்தது. தற்போது அணையின் 64 அடியாக உள்ளது.

    இதற்கிடையே வைகை அணையில் இருந்து ஏற்கனவே மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்காக வினாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் வைகை அணையின் பூர்வீக பாசன பகுதியாக உள்ள ராமநாதபுரம் மாவட்ட தேவைக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து வைகை அணையில் போதுமான அளவு நீர் இருப்பு உள்ளதால் ராமநாதபுரம் பூர்வீக பாசன பகுதிகளுக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, இன்று (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி வரை 7 நாட்களில், மொத்தம் 1,251 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. அதாவது அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் வைகை ஆற்றுப்படுகை வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது. ஏற்கனவே வினாடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட கலெக்டர்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் முன்எச்சரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அதில், வைகை ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆற்றில் இறங்கவோ, ஆற்றை கடக்கவோ கூடாது என்று முன்எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கர்நாடகாவில் பெய்து வரும் மழையின் தீவிரம் காரணமாக அங்குள்ள கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.
    • தற்போது அணையில் 84.22 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணை மூலம் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் சுமார் 17 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது. முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் பின்னர் 5 ஆயிரம், 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு நேற்று 16 ஆயிரம் கனஅடி வெளியேற்றப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கர்நாடகாவில் பெய்து வரும் மழையின் தீவிரம் காரணமாக அங்குள்ள கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் கடந்த 2 நாட்களாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது. அதிகபட்சமாக நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 22 ஆயிரத்து 469 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 21 ஆயிரத்து 628 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    அணையின் நீர்மட்டம் நேற்று 113.69 அடியாக இருந்த நிலையில் இன்று நீர்மட்டம் 114 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து திறக்கப்பட்டுள்ளது. தற்போது அணையில் 84.22 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • அணையில் 83.58 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.

    இதற்கிடையே கபினி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த நிலையில் நேற்று முன்தினம் முதல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த தண்ணீர் இன்று அதிகாலை முதல் ஒகேனக்கல்லுக்கு வரத்தொடங்கியது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணைக்கு நேற்று வினாடிக்கு 6829 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று வினாடிக்கு 8212 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    அணையின் நீர்மட்டம் 113.57 அடியாக இருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இன்று வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது அணையில் 83.58 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • அணைக்கு வினாடிக்கு 6040 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
    • அணையில் தற்போது 84.41 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணை மூலம் காவிரி டெல்டா பகுதியில் 13 மாவட்டங்களில் சுமார் 17 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.

    அதே போல் கடந்த 12-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார். முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து 5 ஆயிரம் கனஅடியாகவும், 10 ஆயிரம் கனஅடியாகவும் தண்ணீர் அதிகரித்து திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் பாசனத்துக்கு தண்ணீர் தேவை அதிகரித்ததன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் உற்பத்தியும் தொடங்கி நடந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.13 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6040 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் தற்போது 84.41 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • அமராவதி அணையின் ஆற்று மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
    • அமராவதி அணையின் மொத்த கொள்ளளவான 90 அடியில் தற்போது 82 அடி உள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை பாசன வசதிக்குட்பட்ட 8 பழைய ராஜ வாய்க்கால்களான ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இன்று முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து இன்று காலை அமராவதி அணையில் இருந்து தண்ணீரை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், ஈஸ்வரசாமி எம்.பி., மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அமராவதி அணையின் ஆற்று மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் அக்டோபர் 10-ந்தேதி வரை 135 நாட்களில் 80 நாட்கள் தண்ணீர் திறப்பு, 58 நாட்கள் தண்ணீர் அடைப்பு என்று அடிப்படையில் விநாடிக்கு 300 கன அடி வீதம் 2073.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இதன்மூலம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 7520 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அமராவதி அணையின் மொத்த கொள்ளளவான 90 அடியில் தற்போது 82 அடி உள்ளது. நீர்வரத்து 374 கனஅடி உள்ளது. அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் உடுமலை பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து 58.83 அடியாக உள்ளது.
    • முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.70 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. போடி கொட்டக்குடியாறு, வருசநாடு மூலவைகையாறு, முல்லை பெரியாறு ஆகிய ஆறுகள் மூலம் வைகை அணைக்கு நீர் வரத்து உள்ளது.

    கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து 58.83 அடியாக உள்ளது. 764 கனஅடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3387 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து வருகிற 15ம் தேதி தண்ணீர் திறக்க நீர்வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    கடந்த சில மாதங்களாக வைகை அணையில் இருந்து குடிநீருக்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழையால் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. பெரியாறு, வைகை அணைகளின் மொத்த நீர் இருப்பு 6 டி.எம்.சி. ஆகும். வைகை அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்கு 15ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து அரசு சார்பில் விரைவில் அறிவிக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.70 அடியாக உள்ளது. 703 கனஅடி நீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 1200 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 4633 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.70 அடியாக உள்ளது. 15 கனஅடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 90.69 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 45.90 அடியாக உள்ளது. 3 கனஅடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.

    • சேலம் மத்திய மாவட்ட செயலாளர் அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • மேட்டூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களையும், கட்சியினரையும் சந்திக்கிறார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து அரசின் திட்டங்களை ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

    அதேபோல் சேலம் மாவட்டத்திலும் வருகிற 12ம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 11-ந் தேதி சேலம் வருகிறார்.

    இதற்காக சேலம் இரும்பாலை ரோட்டில் உள்ள அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை இன்று சேலம் மத்திய மாவட்ட செயலாளர் அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர்அமைச்சர் ராஜேந்திரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மேட்டூர் அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக வருகிற 11-ந் தேதி சேலம் வருகிறார். அவருக்கு பொதுமக்கள் மற்றும் கட்சியினர் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    பின்னர் மேட்டூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களையும், கட்சியினரையும் சந்திக்கிறார். தொடர்ந்து இரவு மேட்டூரில் தங்குகிறார்.

    தொடர்ந்து மறுநாள் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்று 1 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1200 கோடி மதிப்பிலான நல உதவிகளை வழங்கி பேசுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது கலெக்டர் பிருந்தாதேவி, கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமார், கூடுதல் கலெக்டர் பொன்மணி, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், போலீஸ் துணை கமிஷனர் வேல்முருகன், டீன் தேவிமீனாள் மற்றும் அரசு அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

    • விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தேவதானம் சாஸ்தா கோவில் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
    • இதில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி அமைச்சர்கள் சாத்தூர்ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரது ஆலோசனையின்படி ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சாஸ்தா கோவில் அணை நீரை ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் திறந்து வைத்தார்.

    இதில் கோட்டாட்சியர் அனிதா, பொதுப்பணித் துறை பொறியாளர் தனலட்சுமி, வட்டாட்சியர் சீனிவாசன், தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சரவணன், ஜான்சி, பொன்குரு கவுன்சிலர் ஏசம்மாள் அரிராம்சேட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வத்திராயிருப்பு அருகே பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
    • இதனை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டத்தி லுள்ள பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு, அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பங்கேற்று பாசனத்திற்காக தண்ணீரை மலர் தூவி திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    பாசனத்திற்காக பிளவக்கல் பெரியாறு அணையின் மூலம் நேற்று முதல் 9 நாட்களுக்கு வினாடிக்கு 150 கனஅடி வீதமும், நேரடி கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 3 கனஅடி வீதம் 28.2.2023 வரையிலும் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

    பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் திறப்பினால் மீதமுள்ள கண்மா ய்களுக்கு அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து பாசனத்திற்காகவும், பெரியாறு பிரதான கால்வாய் மூலம் நேரடி பாசனத்திற்காகவும் தண்ணீர் வழங்கப்பட உள்ளது.

    இந்த தண்ணீர் திறப்பினால் பிளவக்கல் திட்டத்தின் கீழ் உள்ள 40 கண்மாய்களின் 7219 ஏக்கர் விவசாய நிலங்களும், பெரியாறு பிரதான கால்வாய் நேரடி பாசனத்தின் மூலம் 960 ஏக்கர் விவசாய நிலங்களும் பயனடைய உள்ளன. இதன் மூலம் கொடிக்குளம், கான்சாபுரம், மகாராஜபுரம், வ.புதுப்பட்டி, வத்திரா யிருப்பு, கூமாபட்டி, சுந்தர பாண்டியம், நத்தம்பட்டி, மூவரைவென்றான், மங்கலம், செம்மாண்டி கரிசல்குளம், பாட்டக்குளம் சல்லிபட்டி, விழுப்பனூர், தச்சகுடி, கிருஷ்ணபேரி, நெடுங்குளம், குன்னூர் ஆகிய 17 வருவாய் கிராமங்கள் பயன்பெறும்.

    இதேபோல் அணை நீர் இருப்பினை கருத்தில் கொண்டு பாசன பருவ காலம் வரை தேவைக்கேற்ப தண்ணீர் வழங்கப்படும். விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அமராவதி அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டதால் பிரதான கால்வாயில் 440 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது.
    • அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பாசன வசதி பெற்று வருகிறது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டதால் பிரதான கால்வாயில் 440 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. 90 அடி உயரமுள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே பருவமழை நல்ல முறையில் பெய்து வருவதால் பாசனத்துக்கு எந்த விதமான சிக்கல்களும் இல்லாமல் அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டு வருகிறது.

    மேலும் திருப்பூா், கரூா் வரையில் உள்ள பழைய, புதிய ஆயக் கட்டு நிலங்கள் சுமாா் 47 ஆயிரம் ஏக்கருக்கு செப்டம்பா் 25ஆம் தேதி தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீா்மட்டம் குறைந்து வந்தது.

    இந்நிலையில் நவம்பா் முதல் வாரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம், காந்தலூா், மறையூா், கோவில்கடவு ஆகிய பகுதிகளில் கன மழை பெய்து வந்தது. இதனால் பாம்பாறு, சின்னாறு, தேனாறு ஆகிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் அமராவதி அணைக்கு நீா் வரத்து அதிகரித்து வந்தது.

    இதனால் அணையின் நீா்மட்டம் மளமளவென அதிகரித்து வந்தது. இந்நிலையில் புதன்கிழமை மாலை அணையின் நீா்மட்டம் 87 அடியை கடந்தது. பொதுவாக அணையின் நீா்மட்டம் 88 அடியை எட்டும் நிலை ஏற்பட்டால் உபரி நீா் திறந்து விடப்படும். ஆனாலும் அணையின் கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்காக பிரதான கால்வாய் மூலம் 440 கனஅடி தண்ணீா் புதன்கிழமை மாலை திறந்து விடப்பட்டது. இதுகுறித்து பொதுப் பணித் துறையினா் கூறியதாவது:-

    அணையின் நீா்மட்டம் 87 அடியை எட்டியுள்ளதால் விதிப்படி முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக அணை 88 அடியை எட்டும் பட்சத்தில் உபரி நீா் திறந்து விடப்படும். இதற்கிடையில் பிரதான கால்வாயில் பாசனத்துக்காக 440 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. பொதுப் பணித் துறை அலுவலா்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றனா். 90 அடி உயரமுள்ள அணையில் புதன்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 87.08 அடி நீா் இருப்பு கானப்பட்டது. 4035 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 3886 மில்லியன் கன அடி நீா் இருப்பு இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 950 அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. 525 கன அடி நீா் வெளியேற்றப்பட்டது.

    ×